ஆஸ்திரேலிய தொடரில் அபார ஆட்டம் பழனியில் மொட்டை போட்ட நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு வலை பந்துவீச்சாளராக சென்று எதிர்பாராதவிதமாக இந்திய அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலிய வீரர்களை கதிகலங்க வைத்த தமிழக வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு தன்னுடைய நேர்த்திக் கடனை செலுத்தினார். அவர் கோவிலில் மொட்டை போடும் படம் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடராஜனுக்கு யார்க்கர் நடராஜன் என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு. ரசிகர்கள் இந்த பேரில் அவரை அழைத்தாலும், இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு. இந்திய வீரர்கள் அனைவரும் 'நட்டு' என்று தான் அவரை செல்லமாக அழைக்கின்றனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய நடராஜன் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் தேர்வு பெற்றார். முதல் ஐபிஎல் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக மிக அற்புதமாக பந்து வீசினார். இது தான் இந்திய அணியில் இடம் பெற அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வலை பந்துவீச்சாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போதும் கூட இந்திய அணிக்காக விளையாட முடியும் என்று நடராஜன் கனவிலும் கூட எதிர்பார்க்கவில்லை.

டி20 போட்டியிலும், பின்னர் ஒருநாள் போட்டியிலும், அதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் அரங்கேறி இவர் சாதனை படைத்தார். ஒரு தொடரில் மூன்று அணியிலும் ஒரு வீரர் அரங்கேறுவது மிகவும் அபூர்வம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய மூன்றிலுமே சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடராஜனின் யார்க்கரை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் கதி கலங்கினர் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் ஊர் திரும்பிய நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேளதாளத்துடன் சாரட் வண்டியில் அவரை ஊர்மக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நடராஜன் பழனி கோவிலில் மொட்டை போட்டு தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார். அவர் மொட்டை போடும் படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You'r reading ஆஸ்திரேலிய தொடரில் அபார ஆட்டம் பழனியில் மொட்டை போட்ட நடராஜன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய அணியுடன் தோல்வி... வார்னரின் மகளுக்கு மகிழ்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்