14வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஆரம்பம்

14th world cup hockey

16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. 

உலக கோப்பை ஹாக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த தொடக்க போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த 2 போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 4-வது போட்டி 3 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெற்று வந்தது.

 ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

கேப்டன்  மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை உச்சி முகர்ந்து, இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-கனடா (மாலை 5 மணி), இந்தியா-தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும். முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது. 

You'r reading 14வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஆரம்பம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சப்பாத்தி சமைத்து கொடுத்து மின் ஊழியர்களை சந்தோஷப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்