மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியா அபார ரன் குவிப்பு! 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்னில் டிக்ளேர்!

443 for 7 wickets loss on Melbourn cricket match

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்டில் இரண்டாம் நாளில் இந்தியா அபாரமாக ரன் குவித்தது. புஜாராவின் சதம், கோஹ்லி, ரோகித் அரைசதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குறித்து டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன. பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் முதல் முறையாக களமிறங்கினார்.

அறிமுக போட்டியிலேயே அபாரமாக விளையாடிய மயாங்க் அகர்வால் 76 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68 ரன்களுடனும், காப்டன் கோஹ்லி 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17 வது சதத்தை பூர்த்தி செய்து இந்திய வீரர்களில் சதம் அடித்த கங்குலி (16) யின் சாதனையை முந்தினார். 17 சதம் கண்ட வி.வி.எஸ்.லட்சுமண் சாதனையை சமன் செய்தார். உணவு இடைவேளைக்குப் பின் புஜாரா 106 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 34 ரன்களும், பான்ட் 37 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இந்தியாவின் ஸ்கோர் 443 ரன்களை எட்டியபோது ஜடேஜா 4 ரன்களுடன் ஆட்டமிழக்க 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுடன் இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 63 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. ரன் குவிப்பிற்கு கடினமான மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா 443 ரன்கள் குவித்ததால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

You'r reading மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியா அபார ரன் குவிப்பு! 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்னில் டிக்ளேர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை ஆவின் சேர்மனாக ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜா பதவியேற்பு- வெடிக்க காத்திருக்கும் அதிமுக உட்கட்சி பூசல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்