பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடல்

Pariyerum Perumal Director Mari Selvaraj in USA

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

சமூக வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள சாதி குறித்தும், மனிதநேயத்தை மீட்டெடுப்பதற்கான தேவை குறித்தும் சக மனிதர்களிடம் தொடர்ச்சியாக உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள்.

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் மூலம் இலக்கிய உலகத்தில் அறிமுகமாகி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களுடைய குரலிலேயே பதிவுசெய்துள்ளார் இயக்குநர் தோழர் மாரி செல்வராஜ். தற்பொழுது அமெரிக்கத் தமிழர்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இங்குள்ள தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிவருகிறார்.

இதன் ஒரு கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு டெக்ஸாஸ் மாநிலம் பிரிஸ்கோ நகரில் உள்ள சென்னை கஃபே உணவகத்தில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோழர்கள் சார்பில் ஒரு இரவு விருந்தும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்தும், படத்தில் இடம்பெற்ற பல்வேறு குறியீடுகள் குறித்தும் மற்றும் பொதுவான திரைப்படம், எழுத்து, சமூகம், அரசியல் குறித்தும் தோழர்களின் பல கேள்விகளுக்குப் பொறுமையாகவும், யதார்த்தமாகவும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கலந்துரையாடினார்.

திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து சக மனிதர்களிடம் உரையாடிக்கொண்டே இருப்பேன் என்றும் மனித மாண்பை மீட்டெடுப்பதற்காக கலையைப் பயன்படுத்துவேன் என்றும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்றும் குறிப்பிட்டார். சமத்துவத்தைப் பேசிய பரியனுக்கும், "மரித்த பின் உடலெங்கும் நீலம் பரவும் நான் யார்?" என்ற கேள்வியை முன்வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்குப் படிப்பு வட்ட தோழர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

தகவல்: ஃப்ரிஸ்கோ ஸ்டுடியோஸ்.

You'r reading பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தினகரனுக்கு 'குக்கர்' கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்