தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின்

MK Stalin urges to release Seven Tamils

தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்து உத்தரவு பிறப்பிக்காமல், ஆளுநர் அவர்கள் தொடர்ந்து கெட்டியான அமைதி காப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 161-ஆவது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ், மாநில அரசு இந்த 7 பேரையும் முன்விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால், அதை தமிழக ஆளுநர் அவர்கள் எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.

ஆனால் ஒரு அமைச்சரவை தீர்மானத்தை இத்தனை மாதங்களாக ஆளுநர் நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டு இருப்பதை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை; மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநருக்கு அறிவுறுத்தவும் கோரவில்லை.

தற்போது பா.ஜ.க.வுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர், 7 தமிழர்களின் விடுதலை, நீட் தேர்வு மசோதாக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடுவது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிபந்தனை வைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நிபந்தனை வைத்திருக்கிறாரா என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வோருடன் கூட்டணி என்று தொடக்கத்திலிருந்து அறிவித்து, மாநில உரிமைகளை நசுக்கி, தமிழக மக்களை நாசப்படுத்தும் திட்டங்களை வேண்டுமென்றே திணித்த பா.ஜ.க.வுடன் இப்போது தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் முதலமைச்சர், ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தாவது முதலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து அமைச்சரவை தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு, பல்லாண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்