ஆவின் நிறுவனத்தில் பெரும் ஊழல்.. ரூ.300 கோடி நஷ்டத்திற்கு யார் காரணம்? பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவல்..

Aavin loss touches Rs.300 crore because of Big scandal

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆவின் பாலின் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க விற்பனை விலையை உயர்த்துவது அவசியம் என்றும், இல்லாவிட்டால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அனால், அதற்கு நேர்மாறாக "ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்குகிறது" என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். இப்படி இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசி வரும் நிலையில், ஆவின் நிறுவனம் உண்மையில் லாபத்தில் இயங்குகிறதா? நஷ்டத்தில் இயங்குகிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி வரை ஆவின் நிர்வாக இயக்குனராக சுனில் பாலிவால் இருந்தார். அவரது பணிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் (2016-2017) ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் சுமார் 5,281கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதில் ஆவின் நிறுவனம் சுமார் 139.34கோடி ரூபாய் நிகர லாபத்தில் இயங்கியுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத திரைமறைவு சக்திகள் செய்த வேலையால் திறமையாக செயல்பட்ட சுனில் பாலிவால் மாற்றப்பட்டு 2017ம் ஆண்டு மார்ச்சில் சி.காமராஜ் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் 2017-2018ம் நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் சுமார் 5,478 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, சுமார் 27.96கோடி ரூபாயும், அதற்கடுத்த (2018-2019) நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் சுமார் 5994கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சுமார் 13.36கோடி ரூபாயும் ஆவின் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

ஆகவே, 2017-2018, 2018-2019 நிதியாண்டுகளை விட 2016-2017ம் நிதியாண்டில் குறைந்த அளவே விற்பனை மூலம் வருவாய் ஈட்டியிருந்தாலும் கூட சுனில் பாலிவால் ஆவின் நிறுவனத்தை சுமார் 139.34கோடி ரூபாய் நிகர லாபத்தில் செயல்பட வைத்திருந்தார்.
மேலும், சுனில் பாலிவால் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த போது ஆவின் பாலினை மூலை முடுக்கெல்லாம் தங்கு தடையின்றி போய் சேர்க்க நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே இருந்த 34பேர் தவிர வேறு எவரும் மொத்த விநியோகஸ்தர்களாக வர முடியாது என்கிற நிலையை மாற்றி அவர் பிறப்பித்த உத்தரவால் மொத்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை சுமார் 150வரை உயர்ந்ததோடு, ஆவின் நிறுவனமும் வளர்ச்சிப் பாதைக்கு சென்று நல்ல லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

ஆனால், அவருக்குப் பிறகு ஆவின் நிர்வாக இயக்குனராக சி.காமராஜ் பொறுப்பேற்ற பிறகு, விற்பனை பிரிவு உயரதிகாரிகள் மூலமாக மொத்த விநியோகஸ்தர்களிடம் லஞ்சம் கேட்டு மறைமுகமாக மிரட்டினார். ஒரு லிட்டர் பாலிற்கு 50 பைசா வரை லஞ்சம் கேட்டு அவர் மிரட்டியதால் பாதிக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் தங்களுக்கு வருமானம் கட்டுபடியாகாமல்் ஆவின் பால் விநியோக உரிமத்தை ரத்து செய்து விட்டனர். தற்போது சுமார் 61மொத்த விநியோகஸ்தர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தற்போதுள்ள 61மொத்த விநியோகஸ்தர்களில் பெரும்பாலனோர் லஞ்சம் தர மறுத்து வருவதால் அவர்களையும் ஒட்டுமொத்தமாக காலி செய்து விட்டு தங்களுக்கு எப்போது, எப்படி கேட்டாலும் லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கின்ற சுமார் 11 மொத்த விநியோகஸ்தர்களை, சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகளாக" செயல்பட உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் மொத்த விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என மும்முனை விநியோக முறை இருப்பதால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்களுக்கு சாதகமானவர்களை "சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகளாக" நியமனம் செய்து நான்கு முனை விநியோக முறையை கொண்டு வந்து, ஆவின் லாபத்தை பிரித்து ெகாடுத்து அதிலும் தாங்கள் பங்கு போட திட்டமிட்டு, அதன் மூலம் மிகப்பெரிய அளவில் ஆவின் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர்.

இதன் மூலம், ஆவின் நிறுவனத்தை அழிக்கும் முயற்சியிலும், ஆவினை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையையும் தற்போதைய நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் செயல்படுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆவின் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 300 கோடி ரூபாய் வரை மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பது, துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

எனவே, இந்த 300 கோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமான அதிகாரிகள் யார்? அவர்களுக்கு உடந்தையாக இருந்தது யார்? என்பதை கண்டறிந்து, ஆவின் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளிடம் அந்த இழப்பு தொகையை வசூலிக்க வேண்டும். அதற்காக, தமிழக அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, சுயநலத்திற்காக ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ், விற்பனை பிரிவு மேலாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட அனைத்து தலைமை அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும் உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு, ஆவின் நிறுவனத்திற்கு நேர்மையான, திறமையான ஐஏஎஸ் அதிகாரியை புதிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்ய வேண்டும். அதன் மூலம், ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து காத்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.

You'r reading ஆவின் நிறுவனத்தில் பெரும் ஊழல்.. ரூ.300 கோடி நஷ்டத்திற்கு யார் காரணம்? பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் பயங்கரம்.. சீக்கிய போலீஸ் அதிகாரி மர்ம நபரால் சுட்டுக் கொலை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்