சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது.. கர்நாடக சிறை அதிகாரி தகவல்

Sasikala cannot be released early, prison director said

பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத் துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் 2021ம் ஆண்டு முடிவடைகிறது. இதற்கிடையே, நன்னடத்தை விதிகளின்படி அவருக்கு தண்டனை குறைக்கப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் அவர் வெளியே வருவார் என்றும் திடீரென பேச்சு எழுந்தது.

மேலும், சுப்பிரமணியசாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதையடுத்து, சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்ற தகவல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்கூட்டியே சசிகலா விடுதலையாக வேண்டுமென விரும்புவதாக பேட்டியளித்தார். எனினும், சசிகலாவை சந்திரலேகா சந்தித்தார் என்பதை சிலர் மறுத்தனர்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் நரசிங்கமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் அளித்த பதிலில், கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை சசிகலாவை 36 பார்வையாளர்கள் சந்தித்தனர். டி.டி.வி.தினகரன் 7 முறை சந்தித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் 6 முறையும், கமலா என்பவர் 5 முறையும், சிவகுமார் 4 முறையும் சந்தித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

மேலும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி சசிகலாவை நண்பர் என்ற முறையில் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு 1.45 மணி நேரம் நடைபெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சசிகலாவுடன் சந்திரலேகா சந்திப்பு உறுதி செய்யப்பட்டதும், சசிகலா விடுதலை பற்றி மீண்டும் பேச்சு எழுந்தது.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் இன்று(அக்.21) தெரிவித்தார். தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது.. கர்நாடக சிறை அதிகாரி தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்