ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30ல் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

state election commission reannounced local-body poll dates

உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, டிச.30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். மனு தாக்கல் டிச.9ல் தொடங்கும்.

தமிழகத்தில் சமீபத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக ஒரு மனு தாக்கல் செய்தது.

இதற்கு பின், பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுக்கள் அனைத்தும் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மறுவரையறை பணிகள் துவங்கிய போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பிறகு அவசரமாக மாவட்டங்களை பிரித்துள்ளனர். புதிய மாவட்டங்கள் பிரித்ததால் வரையறை செய்யாமல் தேர்தல் நடத்த முடியாது. அப்படி நடத்தினால் குழப்பம் வரும் என்றார். அதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, அதை தள்ளி வைக்க முடியாது என்று வாதாடினார்.

இதன்பின், பிற்பகல் நீதிமன்றம் கூடிய போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மறுநாள் 6ம் தேதி தீர்ப்பு கூறினர். இதில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தனர்.

இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது என்று அறிவித்தனர்.

இந்த தீர்ப்பை அடுத்து, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை இன்று (டிச.7ம்தேதி) மாலை 4:30 மணியளவில் வெளியானது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 9 புதிய மாவட்டங்கள் தவிர, 27 மாவட்டங்களுக்கு டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும். வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் டிச.9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி டிச.16ம் தேதி வரை நடக்கும்.

டிச.17ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு டிச.19-ம் தேதி கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும். ஊராட்சி ஒன்றியத் தலைவர், கிராம ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஜனவரி 11ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

You'r reading ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30ல் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் அத்தை மகளுடன் நடிகர் அதர்வா தம்பி நிச்சயதார்த்தம்.. ஸ்பெயினில் திருமணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்