குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சித்தார்த் உள்பட 600 பேர் மீது வழக்கு..

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் அந்த சட்டம்.

இந்த சட்டம், மதரீதியாக முஸ்லிம்களை பாகுபாடு காட்டுவதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

டெல்லியில் ஜமியா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று(டிச.19) பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடிகர் சித்தார்த் உள்பட சில பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், நேற்றையபோராட்டத்திற்கு போலீசார் முதலில் கொடுத்த அனுமதியை ரத்து செய்து விட்டதாகவும், தடையை மீறி போராட்டம் நடந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, தடையை மீறி போராட்டம் நடத்தியதாக நடிகர் சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

You'r reading குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சித்தார்த் உள்பட 600 பேர் மீது வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐ.நா. வாக்கெடுப்பு கருத்து.. மம்தாவுக்கு கவர்னர் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்