அதிமுகவில் ஓராயிரம் பழனிசாமிகள் இருக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் மிட்டா மிராசுதார்கள், பெரும் கோடீஸ்வரர்கள்தான் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றி, அண்ணா கண்ட கனவை நனவாக்கும் வகையில் சாதாரண தொண்டன் கூட அமைச்சராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்ற ஒரு நிலையை எம்.ஜி.ஆர். உருவாக்கி விட்டு சென்றார்.

அதனால்தான், இப்போது நான் உள்பட மேடையில் வீற்றிருக்கின்ற அத்தனை பேருக்கும் இந்த பதவி கிடைத்திருக்கிறது. அருமையான பாடல்கள் மூலமாக வழிகாட்டியாக, தேசப்பற்றுள்ளவராக, மக்கள் மீது அன்பு கொண்டவராக வாழ்ந்த ஒரே மனிதர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடையப் போகிறது. இந்த எடப்பாடி பழனிசாமி ஒருவன் மட்டும்தான் அ.தி.மு.க.வில் இருப்பது போலவும், நான் ஒருவர்தான் முதலமைச்சர் என்றும் மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார். அ.தி.மு.க.வில் அத்தனைபேரும் முதலமைச்சர்தான். ஒரு பழனிசாமி அல்ல, ஓராயிரம் பழனிசாமிகள் அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள். நான் இல்லாவிட்டால் அ.தி.மு.க.வை சேர்ந்த வேறு யாராவது முதலமைச்சர் ஆகியிருப்பார்கள். அதனால், மு.க.ஸ்டாலின் கனவு என்றைக்கும் பலிக்காது.
ஸ்டாலின் என்றைக்கும் முதலமைச்சர் ஆகவே முடியாது. நான் முதலமைச்சர் ஆவேன் என்று எண்ணினேனா? இல்லை. உங்களை போல் கீழே அமர்ந்து கேட்டுத்தான் மேலே வந்திருக்கிறேன். அதேபோல், அடிமட்ட தொண்டர்களும் ஒரு காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வர முடியும். அது அ.தி.மு.க.வில் மட்டும்தான் நடக்கும். வேறு எந்த கட்சியிலும் நடக்காது.

தி.மு.க.வில் யாராவது அப்படி வர முடியுமா? மு.க.ஸ்டாலின் வர விடுவாரா? தி.மு.க.வில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், அதற்கு பிறகு உதயநிதியாம். என்ன அக்கிரமம், பாருங்கள். அந்த கட்சிக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஓடாக தேய்ந்து போனவர்களை விட்டுவிட்டு, கருணாநிதியின் மகன் என்ற காரணத்தினால் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரானார்.

மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவரானார்.
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது. கட்சிக்கு யார் விசுவாசமாக இருக்கிறார் களோ, உழைக்கிறார்களோ அவர்கள் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் வர முடியும்.
இவ்வாறு எடப்பாடிபழனிசாமி பேசினார்.

You'r reading அதிமுகவில் ஓராயிரம் பழனிசாமிகள் இருக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்திரயான்-3 திட்டம் முழுவீச்சில் நடைபெறுகிறது.. இஸ்ரோ தலைவர் பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்