தமிழக சட்டசபை மார்ச் 9ல் மீண்டும் கூடுகிறது.. துறை வாரியாக விவாதம்..

சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்.14ம் தேதி தொடங்கியது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் பிப்.17ம் தேதி சட்டசபை தொடங்கி பிப்.20ம் தேதியுடன் முடிவுற்றது. இதில், பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெற்றது. மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா உள்படப் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு, பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்நிலையில், சட்டசபை மீண்டும் மார்ச் 9ம் தேதி கூடுகிறது. சபாநாயகர் தனபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகச் சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த தொடர் ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும். இதில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும். எந்தெந்த நாளில் எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என்பது சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

You'r reading தமிழக சட்டசபை மார்ச் 9ல் மீண்டும் கூடுகிறது.. துறை வாரியாக விவாதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி கலவரத்தை ஒடுக்கக் களமிறங்கிய அஜித்தோவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்