சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு..

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்து ஜமாத், இயக்கங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்றிரவு போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது, தங்கள் கோரிக்கைகளை அவர்கள் எடுத்துரைத்தனர். அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறார். எனினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்ணா போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்துவோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், முதல்வரிடம் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணியை ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சி.ஏ.ஏ. சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தமிழக அரசு அளிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். முதல்வரும் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். எனினும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை சென்னை ஷாஹீன்பாக் (வண்ணாரப்பேட்டை) போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

You'r reading சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்