அரசியல் மாற்றம்.. மீடியாவுக்கு ரஜினி நன்றி

அரசியல் மாற்றம் குறித்த தனது கருத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததற்காக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன் தினம்(மார்ச்12), சென்னையில் லீலா பேலஸ் ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக என்னைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. நான் முதலமைச்சர் பதவிக்கு வர மாட்டேன். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். முதலமைச்சராக ஒரு இளைஞர் திறமையானவராகப் படித்தவராக, அன்பு, பாசம், தன்மானம் உள்ளவராகத் தேர்ந்தெடுத்து உட்கார வைப்போம். கட்சித் தலைவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல் ஆட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், 54 ஆண்டுக் கால திராவிட ஆட்சிகளுக்கு முடிவு கட்ட மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால்தான் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால், தான் தலைமை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
ரஜினியின் பேட்டிக்கு ஆதரவாகவும், ரஜினியைக் கடுமையாக விமர்சித்தும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள், மீம்ஸ்கள் உலா வருகின்றன. இப்போதும் ரஜினி ஏமாற்றி விட்டதாகவும் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரஜினி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தைப் பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இவ்வாறு ரஜினி கூறியிருக்கிறார்.

You'r reading அரசியல் மாற்றம்.. மீடியாவுக்கு ரஜினி நன்றி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா வைரஸ் எதிரொலி.. ஆர்.எஸ்.எஸ் கூட்டம் ரத்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்