திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வாகிறார்.. பொருளாளர் டி.ஆர்.பாலு?

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திமுக பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் மரணம் அடைந்தார். தி.மு.க.வில் கட்சித் தலைவருக்கு அடுத்து பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவிதான். அதனால், இந்த பதவிக்கு அடுத்து யார் வருவார்கள் என்ற பரபரப்பு கட்சிக்குள் ஏற்பட்டது.

இதையடுத்து, புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழுக் கூட்டம், வரும் 29ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது தலைமையில் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக பொதுச் செயலாளர் பதவிக்குத் தான் போட்டியிட விரும்புவதாகவும், அதனால் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாகவும் துரைமுருகன் என்னிடம் கடிதம் கொடுத்திருந்தார். அதை ஏற்று அவரை பொருளாளர் பதவியிலிருந்து விடுவிக்கிறேன். வரும் 29ம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதன்மூலம், திமுகவில் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆகிறார் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது ஐ.பெரியசாமி ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்தும், அவர்களின் அனுபவம் மற்றும் கட்சியினரிடம் அணுகுமுறைகளாலும் அவர்களில் ஒருவருக்கே பொருளாளர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

You'r reading திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வாகிறார்.. பொருளாளர் டி.ஆர்.பாலு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எஸ் பேங்க் முறைகேடு.. அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்