கொரோனா வைரஸ் எதிரொலி.. திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக திமுக பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் இதர நிகழ்ச்சிகளும் வரும் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரைத் தேர்வு செய்வதற்காக வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொதுக்குழு கூடும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்பின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புவதால், பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால், பொதுச் செயலாளர் பதவியுடன், பொருளாளர் பதவிக்கும் பொதுக்குழுவில் தேர்தல் நடக்கும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது. மேலும், பள்ளி கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், பொதுக் குழு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You'r reading கொரோனா வைரஸ் எதிரொலி.. திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பரவும் வேகம் குறைந்தது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்