ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை.. முதலமைச்சர் உறுதி..

lockdown will not extended in tamilnadu, C.M. said.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(ஜூலை17) ஈரோடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கூறியதாவது: கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யார் சிலையை அவமதிப்பு செய்தார்களோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரக் கட்டணம் நிர்ணயித்ததில் என்ன முறைகேடு இருக்கிறது? திமுகவினர் கோர்ட்டுக்கு போனார்கள். அதில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இதற்கு மேலும் என்ன சந்தேகம் என்பது தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், மின்சார வாரிய ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று மின்கணக்கீடு செய்ய முடியவில்லை. அதனால், மொத்தமாக 4 மாதத்திற்குச் சேர்த்து கணக்கீடு செய்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கட்டணம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. 4 மாதத்துக்கு சுமார் 800 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால், 400 யூனிட்டுகளக பிரித்து, 100 யூனிட் கழிக்கப்படுகிறது. மீதி 300 யூனிட்டுக்குத்தான் பணம் செலுத்த வேண்டும். இரண்டாகப் பிரிக்கும்போது 500 யூனிட்டுக்கு மேல் வந்தால் கட்டணம் அதிகமாகும். அப்படி அதிகமாகும் கட்டணத்தை அடுத்த மாத கணக்கெடுப்பில் குறைவாக வந்தால், அந்த நேரத்தில் கழிக்கப்படும். அரசின் இந்த விளக்கத்தை கோர்ட் ஏற்றுள்ளது. அதனால், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.

மருத்துவம் தொடர்பான பணிகளில் ஈடுபடும் போது, கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தான் ரூ.50 லட்சம் வழங்கப்படும். காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது பாதிப்பு ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் மற்றும் வாரிசுக்கு வேலை வழங்கப்படும்.தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. தமிழகத்தில் இனிமேல் எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

You'r reading ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை.. முதலமைச்சர் உறுதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்