சென்னையில் சிறிய வழிபாட்டு தலங்கள் திறப்பு.. ஜிம், டிரைவிங் ஸ்கூல்களும் திறப்பு..

Temples, mosque, church and Gyms reopen in Chennai as part of unlock3

தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. கடைசியாக, கடந்த ஜூலை 1ம் தேதி கிராமப் புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள கோயில்கள், சர்ச், மசூதிகள் திறக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து ஆக.1ம் தேதி முதல், பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. இதன்பின், மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை உள்பட 15 மாநகராட்சிப் பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டது. சென்னை, மதுரை போன்ற மாநகராட்சிகளில் நடைபாதைகளில் உள்ள கோயில்களில் கூட தினமும் ரூ.200, ரூ300க்கு குறையாமல் உண்டியல் வருமானம் இருக்கும். அப்படிப் பார்த்தால் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரம் என்பது மிகக் குறைவாகும். ஆயினும் அந்த கணக்கு எல்லாம் பார்க்காமல் சிறிய கோயில்களைத் திறந்துள்ளனர்.

மேலும், சில கோயில்களில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பக்தர்களின் உடல்நிலையைப் பரிசோதித்த பின்பு உள்ளே அனுமதிக்கின்றனர். முகக்கவசம் அணிந்து வர வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும், தேங்காய் பழம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இதே போல், சிறிய சர்ச்சுகள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உடற்பயிற்சி கூடங்களும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அவற்றிலும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்றவை பின்பற்றப்படுகிறது.

You'r reading சென்னையில் சிறிய வழிபாட்டு தலங்கள் திறப்பு.. ஜிம், டிரைவிங் ஸ்கூல்களும் திறப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு.. பிரதமர் மோடி ட்வீட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்