திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்.. எம்.எல்.ஏ. பதவி தப்பியது..

Ku.Ka.Selvam MLA dismissed from DMK.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது எம்.எல்.ஏ. பதவி தப்புகிறது.சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமாக இருந்தவருமான கு.க.செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி சென்று அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.அதன் பிறகு, தான் பாஜகவில் சேரவில்லை என்று மறுத்தார். அதே சமயம், திமுக தலைமையை விமர்சித்தும், பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேட்டி கொடுத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தனது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படாமல் காப்பாற்றிக் கொள்ளவே அவர் அப்படி பேட்டி அளித்தார்.

அதாவது, ஒரு எம்.எல்.ஏ. தானாக கட்சி மாறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். அதே சமயம், அவரை அந்த கட்சியே நீக்கியிருந்தால், அவர் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவி பறிபோகாது. இதனால், கு.க.செல்வத்தின் பதவிகளை பறித்து, தற்காலிக நீக்கம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு கு.க.செல்வம் பொத்தாம் பொதுவாக ஒரு பதிலைக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கு.க.செல்வத்தை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைத்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில், கு.க.செல்வம் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளுபடி இல்லாததால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருக்கிறார்.திமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், கு.க.செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகாது. எனினும், அவர் பாஜகவில் இணைந்து பாஜக எம்.எல்.ஏ.வாக தனி ஆளாக சட்டசபைக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You'r reading திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்.. எம்.எல்.ஏ. பதவி தப்பியது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை.. தமிழக அரசு அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்