அதிமுக முன்னாள் மந்திரி திமுகவில் சேர்ந்தார்.. ஸ்டாலின் வரவேற்பு..

Former admk minister vijay joins dmk.

அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், திமுகவில் சேர்ந்தார். அவரை துண்டு போட்டு வரவேற்றார் ஸ்டாலின்.தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டு வருகிறது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சிப்பூசல்களை சரிசெய்யும் பணியிலும், கூட்டணிக்காக ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக, அதிமுகவில் கட்சிப் பதவி கிடைக்காதவர்களும், எம்.எல்.ஏ. சீட் கிடைக்காது என்ற சந்தேகத்தில் உள்ளவர்களும் தற்போது கட்சி மாறத் தொடங்கியுள்ளனர். திமுகவில் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க.செல்வம், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஜெ.அன்பழகன் இறந்ததும் அந்தப் பதவி இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசுவுக்கு வழங்கப்பட்டது. இதனால், எம்.எல்.ஏ. சீட்டும் தனக்குக் கிடைக்காது என்பதை உணர்ந்த கு.க.செல்வம், பாஜகவுக்குத் தாவினார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து டாக்டர் விஜய் கட்சி மாறியுள்ளார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டாக்டர் டி.எஸ்.விஜய், புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர் மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்தப் பதவி தற்போதைய அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளரான எஸ்.ஆர்.கே.அப்புவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த டாக்டர் விஜய் இன்று(ஆக.15) காலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் அவர் இணைந்தார். அவருக்கு ஸ்டாலின் துண்டு போட்டு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You'r reading அதிமுக முன்னாள் மந்திரி திமுகவில் சேர்ந்தார்.. ஸ்டாலின் வரவேற்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தியாகிகள் ஓய்வூதியம் ரூ17 ஆயிரமாக உயர்வு.. சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்