விஜயகாந்த் தேறி வருகிறார்.. பிரேமலதாவிடம் முதல்வர் தொலைப்பேசியில் விசாரிப்பு..

blob:https://web.whatsapp.com/8355726e-2dd6-43d3-b16f-9d209bbcb77b

விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை.
அவருக்குக் கடந்த 23ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் நலமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜயகாந்த் வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, சென்னை மியாட் ஆஸ்பத்திரிக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் ஆஸ்பத்திரிக்குப் பரிசோதனைக்காகச் சென்ற விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த்தின் உடல் நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரித்தார். மேலும், முதலமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி அறிந்து, அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்திடம் தொலைப்பேசியில் விசாரித்தேன். அவர் பூரண நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் விஜயகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, விஜயகாந்த் வீட்டு வாசலில், கொரோனா பாதித்த வீடு என்று சிவப்பு நிற ஸ்டிக்கரை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டினர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் வீட்டு வேலைக்காரர்கள், அதைக் கிழித்தெறிந்ததாகவும் நகராட்சியினர் மீண்டும் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறுகையில், கேப்டன் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் அவர் முழு குணம் அடைந்து வீடு திரும்புவார். நாங்கள் மாநகராட்சி மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

You'r reading விஜயகாந்த் தேறி வருகிறார்.. பிரேமலதாவிடம் முதல்வர் தொலைப்பேசியில் விசாரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர் ரயில் மறியல்.. ரயில்கள் பாதியில் நிறுத்தம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்