திருப்பதி கோயிலில் விஐபி தரிசன டிக்கெட்டை விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது...!

Two women arrested for selling VIP darshan tickets at Tirupati temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக விலைக்கு விஐபி தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பி களின் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த சிபாரிசு கடிதங்களுக்கு ரூபாய் 500 கட்டணம் செலுத்தி விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த டிக்கெட்டுகளில் ஒரு பகுதி இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யும் இடைத்தரகர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயவாடா எம்எல்ஏ புத்தா வெங்கடேஸ்வர ராவின் கடிதத்தை வைத்து விஐபி தரிசன டிக்கெட் பெற்று சிலர் பக்தர்களிடம் அதிகப் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகத் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா பவானி நகரைச் சேர்ந்த நவ்யஸ்ரீ 28, விஜயகுமாரி 47 ஆகிய இரண்டு பெண்களைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருப்பதி காதி காலணியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். முக்கியப் பிரமுகர்களிடம் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகச் சொல்லி சிபாரிசு கடிதங்களைப் பெற்று அதன் மூலம் விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You'r reading திருப்பதி கோயிலில் விஐபி தரிசன டிக்கெட்டை விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பாஜக பிரமுகர் சிக்கினார்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்