வெற்றிவேல் யாத்திரை அடியோடு ரத்து : பாஜக தலைவர் தகவல்

நிவர் புயல் காரணமாக வேலை யாத்திரை அடியோடு ரத்து செய்யப்படுகிறது. இனி அறுபடை வீடுகளில் உள்ள கோவில்களில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நிவர் புயல் காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றி வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இனி மீதமுள்ள மாவட்டங்களிலும் வேல்யாத்திரை, புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் நான்காம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்தப்படும். டிசம்பர் 5 ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும்.

தமிழக அரசு நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது.புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் பா.ஜ.க தொண்டர்களும் ஈடுபடவுள்ளனர் .அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து அ.தி.மு.க. உறுதி செய்துவிட்ட நிலையில் பா.ஜ.க தரப்பில் தேசிய தலைமை தான் அதுகுறித்து அறிவிக்கும். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி அதன் பின்னரே அறிவிக்கப்படும். அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனையில் பா.ஜ.க விற்கு 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம் மட்டுமே.

எத்தனை இடங்கள் கேட்பது போன்றவை குறித்து இப்பொழுது ஜோதிடம் பார்க்கத் தேவையில்லை.ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார்.சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு முருகன் தெரிவித்தார் .

You'r reading வெற்றிவேல் யாத்திரை அடியோடு ரத்து : பாஜக தலைவர் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புளிப்பான மாங்காய் துவையல் ரெசிபி.. இப்படி செய்து பாருங்கள் சுவை அள்ளும்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்