சென்னையை குலுங்க வைத்த பாமக தொண்டர்கள்!

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர். இராமதாஸ் அவர்கள் வன்னியர் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகக் கள போராட்டம் நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கான இட பங்கீடு இது வரை எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்து களம் கண்டது. அந்த கூட்டணி சமயத்தில் பாமக சார்பாக 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் பேரறிவாளன் விடுதலை உட்பட வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு கோரிக்கையும் ஒன்று.

அதிமுக அரசு இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளதற்குக் காரணம் பாமகவின் பங்களிப்பு தான் என்று முதலமைச்சர் திரு.எடப்பாடி K பழனிச்சாமி அவர்களும் தெரிவித்தார். மேலும் அவர் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் நெருக்கம் காட்டியும் வந்தார். இந்நிலையில் அதிமுக அரசு வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் கோரிக்கை கிடப்பிலேயே போடப்பட்டது. இது தொடர்பாகப் பல முறை அறிக்கைகளை மருத்துவர் வெளியிட்டாலும், எந்த முடிவும் எட்டப்படாததால் இந்த டிசம்பர் மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனக் கடந்த அக்டோபர் மாதத்திலேயே மருத்துவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில், பாமக தொண்டர்களே நான் இருக்கும் போதே இந்த ஏழை மக்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தே தீர வேண்டும். எனவே தொண்டர்கள் அனைவரும் சென்னையை நோக்கி வாரீர் என்று தெரிவித்திருந்தார். பாமக கட்சியின் நிறுவனரான மருத்துவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் பாமக தொண்டர்களிடையே பெரிய எழுச்சி ஏற்பட்டது. அதன் விளைவு இன்று சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் பாமகவினர் நகரின் பல இடங்களிலும் தொடர் போராட்டம் மற்றும் இரயில் மறியல் நடத்தி வருகின்றனர்.

இதனைக் கட்டுக்குள் வைக்கச் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 5000 போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக பாமகவின் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் அவர்கள் முதலமைச்சரைச் சந்தித்துள்ளார். பாமக தொண்டர்கள் அன்புமணியின் அறிக்கைக்காகக் காத்துக்கொண்டு உள்ளனர்.

You'r reading சென்னையை குலுங்க வைத்த பாமக தொண்டர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த காலத்தில் இப்படி ஒரு காதலர்களா?? திருமணத்தை சிம்பிளாக நடத்தி 200 ஏழைகளுக்கு உதவி செய்த காதல் ஜோடி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்