ரஜினி அரசியலுக்கு வராதது பாஜகவுக்கு ஏமாற்றமா? கமல் பதில்..

ரஜினியைச் சந்தித்துத் தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்பேன் என்று கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று(டிச.30) அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கமல் கூறியதாவது:அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. சென்னை திரும்பியதும் ரஜினியைச் சந்தித்துப் பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

ரஜினி நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். அவர் என் நண்பர் என்ற வகையில், அவரிடம் தேர்தலில் ஆதரவு தருமாறு கோருவேன். ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத் தமிழக மக்கள் விரும்பவில்லை.திராவிடம் என்று சொல்வதால், ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது.

ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது.பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. எனக்கு நேர்மையான அரசியலில் ஈடுபட்டேன் என்பது என் கல்லறையில் இருந்தால் போதும். விவசாயிகள் போராட்டத்தைப் பிரதமர் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

You'r reading ரஜினி அரசியலுக்கு வராதது பாஜகவுக்கு ஏமாற்றமா? கமல் பதில்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கார்த்தி - செல்வா படம் 10 ஆண்டுக்கு பிறகு ரீ ரிலீஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்