சட்டசபைக்குள் குட்கா.. ஸ்டாலின் மீதான உரிமைமீறல் நோட்டீஸ் மீண்டும் ரத்து..

சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டியதற்காக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைமீறல் நோட்டீசை மீண்டும் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் குட்கா, பான்மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பரவலாக இந்த பொருட்கள் பெட்டிக் கடைகளில் விற்கப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சியான திமுக பிரச்னையை கிளப்பியது. அப்போது, சட்டசபைக்குள் பான்பராக், குட்கா பாக்கு பொட்டலங்களை கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், எல்லா ஊரிலும் குட்கா, பான்மசாலா தடையின்றி விற்கப்படுவதாகவும் இதற்கு லட்சக்கணக்கில் மாமூல் தரப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமன்று கோரி உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், அந்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்தனர். அதில், ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்தனர்.

நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால், மீண்டும் புதிய நோட்டீஸ் அனுப்பத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர். இதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து அவர்களும் ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று(பிப்.10) தீர்ப்பளித்தார். உரிமை குழுவின் 2-வது நோட்டீசையும் ரத்து செய்வதாக தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வேறு காரணங்களே குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You'r reading சட்டசபைக்குள் குட்கா.. ஸ்டாலின் மீதான உரிமைமீறல் நோட்டீஸ் மீண்டும் ரத்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்துமிக்க சுவையான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்