சந்தேகப்பட்ட ரோந்து போலீஸ்: கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

சென்னை அருகே திருப்போரூர் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த வாகனத்தை இடைமறித்த ரோந்து போலீசார் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரை மீட்டு, கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். பாலு (வயது 29), சதீஷ் (வயது 27) இருவரும் கூட்டாக தொழில் செய்து வந்துள்ளனர். பணம் பங்கிடுவதில் இருவருக்கும் இடையே பிரச்னை கிளம்பியுள்ளது. ஆகவே, சதீஷ் தொழிலில் இருந்து விலகிக்கொள்வதாக கூறி, தனது பங்கான பணத்தை திரும்ப கேட்டதாக தெரிகிறது. பணத்தை திரும்ப அளிக்க பாலு தாமதித்ததால், கோபம் கொண்ட சதீஷ், பாலுவை கடத்த திட்டமிட்டுள்ளார். சதீஷின் மைத்துனர் விக்கி, விக்கியின் நண்பர்கள் பிரசாந்த் (வயது 20), விஷால் (வயது 22), நரேஷ் (வயது 30), உமா மகேஸ்வரன் (வயது 18) ஆகியோர் சேர்ந்து பாலுவை கடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, விக்கி பாலுவை தொடர்பு கொண்டு, அவருடன் தொழிலில் இணைந்துகொள்வதாக தெரிவித்துள்ளார். அது குறித்து பேசும்படி பாலுவை மறைமலைநகர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அழைத்துள்ளார். அங்கு வந்த பாலுவை பிரசாந்த் உள்பட நான்கு பேர் கடத்தி மகாபலிபுரம் நோக்கி கொண்டு சென்றுள்ளனர். விக்கி, பாலுவின் வீட்டுக்குச் சென்று அவரது காரை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திருப்போரூர் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் பாலுவை கடத்திச் சென்ற காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மறித்து விசாரித்துள்ளனர். உள்ளே இருந்த பாலு, தன்னை கடத்திச் செல்வதாக கூறியதும், போலீசார் அவரை மீட்டு, காரில் இருந்த மற்ற நான்கு பேரையும் கைது செய்து, விக்கியையும் சதீஷையும் தேடி வருகின்றனர்.

You'r reading சந்தேகப்பட்ட ரோந்து போலீஸ்: கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்