வரதட்சணை கொடுமை வழக்குகளிலிருந்து தப்பிக்க முடியாது – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!

தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தையை பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமை என்றும் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த பெற்றோர், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரியிருந்தனர்.

அந்த மனுவில், மகனுக்கு திருமணமான நாளிலிருந்து தாங்கள் தனியாகத்தான் இருந்து வந்ததாகவும், மருமகளின் தற்கொலைக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும் மருமகளை துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை கூறி, பெற்றோர்கள் தப்பித்துக் கொள்வது இந்த சமூகத்திற்கு தவறான தகவலை கொண்டு செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது,இருப்பிடம் தருவது, வளர்ப்பது மற்றும் நல்ல கல்வியை வழங்குவது,நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல, பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார்.

You'r reading வரதட்சணை கொடுமை வழக்குகளிலிருந்து தப்பிக்க முடியாது – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்