தமிழகத்தில் மருத்துவ பதற்றம் இல்லை – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவர் பற்றாக்குறை நிலை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள நடுத்தர மக்களும் ஏற்கும் வகையில் தடுப்பூசிக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தனியாருக்கு மாற்றி வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

வழக்கில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இதேபோன்ற வழக்குகள் 6 உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு உள்ளதால் அவற்றை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை முடிவு செய்துள்ளதாகவும், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே-வை நீதிமன்றத்திற்கு உதவும் நபராக நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரெம்டெசிவர் மருந்தை பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் குப்பிகள் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் இருப்பு இல்லாமல் இருக்கலாம் எனவும், அரசிடம் கேட்டால், 4,800 ரூபாய் சந்தை மதிப்புள்ள ஒரு குப்பியை 783 ரூபாய்க்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆக்சிஜன் குறித்து விளக்கம் அளித்தபோது, நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 400 டன் மற்றும் புதுச்சேரியில் 150 டன் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 1,167 டன் இருப்பு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் தற்போதைய தேவை என்பது 250 டன் ஆக மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 65 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

வெண்டிலேட்டர் இருப்பை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் உள்ளா 9,600 வெண்டிலேட்டர்களில், 5,887 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6,000 வெண்டிலேட்டர்களில், 3,000 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில், தற்போது 84,621 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் வெண்டிலேட்டர் அல்லது ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இல்லை என விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் படுக்கை, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என எதிலும் பற்றக்குறை இல்லை என் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா பரவலில் பதற்றமான நிலை என தமிழகத்தில் தற்போது இல்லை எனவும் விளக்கம் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் விளக்கம் அளித்தார்.

இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அறிந்து உடனடியாக முக்கிய முடிவுகளை எடுக்க அரசின் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் அல்லது சார்பு செயலாளர் தலைமையிலான குழுவை அமைத்து ரெம்டெசிவிர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர், தடுப்பூசிகள் ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

போதிய ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலாத பிற மாநிலங்களுக்கு, இங்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் உதவி செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.

18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டணமாக அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாயும், தனியார் மருத்துவமனையில் 600 ரூபாயும் வசூலிக்கபடுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் பெருமளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்புடையது அல்ல என குறிப்பிட்டு, ஒரு வருட ஊரடங்கை கருத்தில் கொண்டு அதை குறைத்து நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி எவ்வளவு உள்ளது என்பது குறித்த விவரங்களை ஏப்ரல் 26ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

You'r reading தமிழகத்தில் மருத்துவ பதற்றம் இல்லை – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நகைச்சுவை நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான விருது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்