மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மானியம் ரூ.650ல் இருந்து ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மாணியம் வழங்கி வருகிறது. ஏற்கனவே ரூ.650 என்ற வழங்கப்பட்டு வந்த மாணியத் தொகையை தமிழக அரசு சார்பில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2012-2013ம் ஆண்டில், 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மேல்பாக்கம் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு, தரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கு ஏதுவாக நாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டு வந்த உணவூட்டு மானியத்தை மாதமொன்றுக்கு ரூ.650 என உயர்த்தி ஆணையிட்டார்.

தமிழ்நாட்டில் செயல்படும் 74 அரசு இல்லங்கள் மற்றும் 228 சிறப்புப் பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 3 மாற்றுத்திறனாளிகள், ஆண்டுக்கு 8 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில் மாதம் ஒன்றுக்கு 650 ரூபாய் உணவூட்டு மானியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சத்தான உணவை வழங்கும் பொருட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் 650 ரூபாய் மாத உணவூட்டு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்கப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் 11 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்: நள்ளிரவு முதல் லாரிகள் இயக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்