தலைவர் கலைஞருக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி - ஸ்டாலின்

தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி!

தமிழகத்தில் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஆட்சி செய்த தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்றியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றும் ஆனால் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதற்கு உயிரூட்டும் வகையில், தமிழக அரசு பிராமணர் அல்லாதவரை அர்ச்சகராக நியமித்துள்ளது. மதுரையை சேர்ந்த மாரிச்சாமி என்பவர் அழகர்கோவிலின் உப கோயிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, வேதமந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்தால், இந்த பணி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading தலைவர் கலைஞருக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி - ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதி புகைப்படம் வெளியீடு... பூரிப்பில் தி.மு.க தொண்டர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்