காவிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி

காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணை நிரம்பியதால் 2 லட்சம் கன அடி காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி, பவானி, அமராவதி அணை நீர் கலந்து 2.50 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருச்சி மாவட்டம் கல்லணை, கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சமூதாயக்கூடம், அரசு பள்ளி, தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் சென்னையில் இருந்து கோவை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி, பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

நிவாரண முகாம்களில் , தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது கால் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. வேட்டியை மடித்தபடி அந்த தண்ணீரில் இறங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சென்றனர். ஆய்வுக்கு பிறகு, ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

You'r reading காவிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்