வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்: விஜயகாந்த்

கேரள மாநிலத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் பெய்த இடைவிடாத கனமழையால், பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி பயங்கர சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயிற்கு பெரும் சேதம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது. இதனால், கேரள மாநிலம் துயரத்தில் இருந்து மீள்வதற்கு, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து நிவாரண நிதி, நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும் வரலாறு காணாத கன மழையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது மனம் வேதனை ஏற்படுகிறது.

கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதியாக 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் கேரளா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்த மத்திய அரசு, பின்பு ஹெலிக்காப்டர் மூலம் நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த பின், கேரளா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன், மத்திய அரசின் நிதியாக இரண்டாம் கட்டமாக 500 கோடி ரூபாய் அறிவித்தார்.

கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகங்கள் சார்பில் கேரள மக்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்: விஜயகாந்த் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்