முதலமைச்சர் மீது புகார்... நடவடிக்கை என்ன?

முதலமைச்சர் மீது புகார்... நடவடிக்கை என்ன?

முதலமைச்சருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை பணிகள் ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு செய்ததாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரின் உறவினர்கள் 1991 முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் மகன் என்ற காரணத்திற்காக அவருக்கு அரசு ஒப்பந்தங்களை பெற தகுதி இல்லையா எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

உலக வங்கி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரகம் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால் இந்த விசாரணை எப்படி நியாயமாக இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன், இந்த புகார் குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகார் மீது அன்றாடம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

You'r reading முதலமைச்சர் மீது புகார்... நடவடிக்கை என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்