11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் டேப்: அமைச்சர் செங்கோட்டையன்

Minister Sengottaiyan says Tab for class 6th to 11th soon

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு டேப் வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சுமார் 424 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். மேலும், அதே பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் திறந்து வைத்தார்.

இதன்பிறகு, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்திய அளவில் தமிழகத்தில் தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர் சேர்க்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் 0.88 சதவீதம் பேர் தான் இடை நிற்றல் செய்கின்றனர்.

மத்திய அரசின் நிதி உதவியுடன், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற 11 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டேப் வழங்கப்படும். அதை கொண்டு கல்வி சம்பந்தமான விஷயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் அடல் டிங்கரிங் லேப் திட்டத்தின் கீழ் 675 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் லேப் தொடங்கப்படும். இந்த லேப் மூலம் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், ரோபோடிக் என பொறியியல் கல்வி சார்ந்த அனைத்து தொழில் நுட்பங்களையும் மாணவர்கள் அறிந்துக் கொள்ள முடியும்.

இதற்காக, மத்திய அரசு ரூ.272 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து, 675 பள்ளிகளில் இந்த லேப் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading 11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் டேப்: அமைச்சர் செங்கோட்டையன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புற்றுநோயால் பாதிப்பு: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்