குரூப் 2 தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்- ஸ்டாலின் கண்டனம்

MK Stalin condemns TNPSC Group-2 Question

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு சாதி அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ. ராமசாமி நாயக்கர், காந்திஜி, இராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்வியைத் தயாரித்தவர், சரிபார்த்தவர், மேற்பார்வை செய்த ஆணையத்தின் அதிகாரம் படைத்தவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரியுமா, தமிழ்நாடு தெரியுமா எனத் தெரியவில்லை.



ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், 'இ' என்று பிழையாகப் போட்டுள்ளார்கள்.

கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச் சொன்னால், தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத்தானே செய்வார்கள்!

இன்றிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1928ம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

யாரும் சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவர் அவர். சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர் அவர்.

எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர் அவர். அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும்.

இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You'r reading குரூப் 2 தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்- ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மிக்சி, கிரைண்டர் வடிவ கேக் வெட்டி ‘சர்கார்’ சக்சஸ் கொண்டாட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்