ஜெ.வை கொண்டாடும் திமுக... பழிபோடும் அதிமுக.... எடப்பாடிக்கு புகழாரம் இப்படியும் ஒரு கஜா கூத்து!

Politics on Gaja Cylone Fund

கஜா புயல் நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை ரூ1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை முன்வைத்து ஒரு அரசியல் கூத்து திமுக- அதிமுக வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது.

சுனாமி நிவாரண நிதியாக தாம் எழுதிய கண்ணம்மா, மண்ணின் மைந்தன் திரைப்படங்களில் இருந்து தமக்கு கிடைத்த ரூ21 லட்சம் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என 2005-ல் கருணாநிதி அறிவித்தார். இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்கினார்.

இத்தனைக்கும் திமுக- அதிமுக இடையேயான மோதல் மிக தீவிரமாக இருந்த காலம். அப்போதே ஜெயலலிதாவை சந்தித்து நிவாரண நிதி கொடுத்த ஸ்டாலின், தற்போது பொருளாளர் துரைமுருகனை அனுப்பி முதல்வர் எடப்பாடியிடம் கொடுக்க வைத்தார். இதை திமுக நிர்வாகிகள் சிலரே ரசிக்கவில்லையாம்.

என்னதான் இருந்தாலும் ஸ்டாலினை சந்திக்க அன்று எதிரியாக இருந்த ஜெயலலிதா ஒப்புக் கொண்டார். அதேபோல் இன்று முதல்வர் எடப்பாடியை ஸ்டாலின் நேரடியாக சந்தித்திருக்கலாம். என்ன இருந்தாலும் ஸ்டாலினை ஒப்பிடுகையில் ஜெயலலிதா, ஜெயலலிதான் என புகழராம் சூட்டுகிறதாம் அறிவாலய பட்சிகள்.

ஆனால் அதிமுக தரப்போ, அப்படி எல்லாம் ஸ்டாலினை ஜெயலலிதா எளிதாக சந்திக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஸ்டாலினை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அப்போது அவரை சந்திக்க ஒப்புக் கொண்டார். ஸ்டாலினின் பரம எதிரியாக இருந்த கராத்தே தியாகராஜனையும் ஸ்டாலினையும் ஒரே கியூவில் நிற்கவைத்து, பத்தோடு பதினொன்றாகத்தான் நிவாரண நிதியைப் பெற்றார் ஜெயலலிதா.

எல்லோரையும் போலவே ஸ்டாலினை காக்க வைத்தும் அவமானப்படுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் முதல்வர் எடப்பாடியோ, திடீரென தங்களது வீட்டுக்கு வந்த திமுக நிர்வாகிகளை வரவேற்று உபசரித்து அவர்களது அனுமதியுடன் உடைமாற்றிக் கொண்டு எவ்வளவு பெருந்தன்மையாய் நடந்து கொண்டார் தெரியுமா? என்கின்றனர்.

இதென்னடா ஜெயலலிதாவை திமுக புகழ்கிறது.. ஜெயலலிதாவை அதிமுக இகழ்கிறது... எடப்பாடியை கொண்டாடுகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

-எழில் பிரதீபன்

You'r reading ஜெ.வை கொண்டாடும் திமுக... பழிபோடும் அதிமுக.... எடப்பாடிக்கு புகழாரம் இப்படியும் ஒரு கஜா கூத்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெப் சீரியலில் களமிறங்கும் அமலா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்