தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதித்த சிபிஐ - நீதி பெற்றுத் தந்த சி.பி.எம்!

Sterlite Firing: CBI registers case against TN Police

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. மார்க்சிஸ்ட்டுகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது' என நெகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான உ.வாசுகி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட‌னர். இதில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடப்பட்டது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில, தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை முதலில் போலீசாரும் பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர்.

பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர். மூன்று நாட்களுக்கு முன்பு அந்த குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம். ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது' எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது யாருடைய உத்தரவின் பேரில் என விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதைப் பற்றிப் பதிவிட்டுள்ள ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சிபிஎம் கட்சியின் மூத்த நிர்வாகியுமான உ.வாசுகி, ' தூத்துக்குடி துப்பாக்கி சூட்டையொட்டி அதற்குக் காரணமான வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் மீது மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி செயலாளர் அர்ஜூனன் கொடுத்த புகார் அடிப்படையில் சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் சி.பி.ஐ தாமதம் செய்தது. எனவே சி.பி.ஐ. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று மார்க்சிஸ்ட் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பின்னணியில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிச்சயம் தொடர் கவனம் செலுத்தும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

-அருள் திலீபன்

You'r reading தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதித்த சிபிஐ - நீதி பெற்றுத் தந்த சி.பி.எம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 31 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்