தெலுங்கானா தேர்தலில் வெற்றி : சந்திரசேகரராவுக்கு ராமதாஸ் வாழ்த்து

Dr Ramadoss greets Telangana CM Chandrasekara rao

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரசேகர ராவுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:

அன்புள்ள திரு. க. சந்திரசேகர ராவ் அவர்களுக்கு!

தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தெலுங்கானா மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தெலுங்கானா போராட்டத்தில் நீங்கள் காட்டிய தீவிரத்தையும், செய்த தியாகத்தையும், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் ஒருவன் என்ற முறையில் நான் அறிவேன். அதற்கான அங்கீகாரமாகவே 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தனர்.

2014-ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டு அதன் முதலமைச்சராக நீங்கள் பதவியேற்ற போது நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,‘‘தெலுங்கானா பகுதி தலைவராக தனி மாநிலம் அமைப்பதில் எவ்வாறு வெற்றி பெற்றீர்களோ, அதேபோல் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அம்மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதிலும் வெற்றி பெறுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்று கூறியிருந்தேன். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் விவசாயம், பாசனம், கல்வி, சுகாதாரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, பல சாதனைகளை படைத்திருக்கிறீர்கள்.

அதற்கான பரிசாகத் தான் பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு முதல்முறையாக நடத்தப்பட்ட தேர்தலிலும் மக்கள் உங்களையே தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களின் மக்கள் பணியும், முற்போக்குத் திட்டங்களும் தொடர வேண்டும். இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியேற்கவுள்ள உங்களுக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

You'r reading தெலுங்கானா தேர்தலில் வெற்றி : சந்திரசேகரராவுக்கு ராமதாஸ் வாழ்த்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காடுவெட்டி குரு நினைவு மணிமண்டபம்: நாளை மறுநாள் அடிக்கல் நாட்டு விழா- ஜி.கே. மணி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்