வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள்... பாஜக மீது அதிமுக அட்டாக்

AIADMK daily comments Five State Election results

மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா.

நமது அம்மா நாளேடு வெளியிட்டுள்ள கவிதை:

ஐந்து மாநில
தேர்தல்
முடிவுகள்

ஆளும்
பாஜகவுக்கு

அதிர்ச்சி
தந்திருக்கு

அதல
பாதாளத்தில்
கிடக்கும்
காங்கிரசுக்கோ

அளவில்லா
மகிழ்ச்சி
தந்திருக்கு

மிசோரம்
தேசிய முன்னணி

தெலங்கானா
ராஷ்டிரிய சமீதி
கட்சிகளுக்கோ

மாநில
கட்சிகளின்
மகத்துவத்தை
உணர்த்திய

மிடுக்கான
எழுச்சி
தந்திருக்கு

இது அடுத்து
வரவிருக்கும்

பாரத தேசத்தின்
பதினேழாவது

மக்களவைத்
தேர்தலுக்கு

முன்னோட்டமாக
அமையுமா?

இல்லை

தவறுகளை
திருத்தி

தங்களை
வெற்றிப்
பாதைக்கு

திருப்பிக்
கொள்ள

சரிவை
சந்தித்தவர்களுக்கு

சந்தர்ப்பமாக
மாறுமா?

இதுபோல

ஆளுக்கொரு
பக்கம்
அலசல்கள்

வீதிக்கு
வீதி
விமர்சனங்கள்

ஆனாலும்

ஒரேநாடு
ஒரே வரி
ஒரே கட்சி
ஒரே ஆட்சி
என்பதாக

ஒளிவட்டம்
வரைந்து
கொண்டு

அதிகார
பரிவட்டம்
கட்டிக் கொள்ள

ஆவல்
கொண்டவர்கள்

ஐந்து மாநில
தேர்வு முடிவு

மாநிலத்தை
வழிநடத்தும்
தலைமையை

தேர்வு செய்யும்
முடிவே தவிர

தேசத்தின்
ஆள்வோரை

தேர்ந்தெடுக்கும்
தீர்ப்பல்ல
என்பதாக

தத்துவார்த்தம்
பேசி
தப்பிக்கக் கூடாது..

பண
மதிப்பின்மை
ஏற்படுத்திய
பாதிப்புகள்

முறையாக
அலசி
ஆராய்ந்து

முன்வைக்கப்படாத
அவசர
ஜிஎஸ்டியால்
எழுந்த

ஆவேசக்
கோபங்கள்

வரலாறு
காணாத
அளவில்

சர்வதேச
சந்தையில்
கச்சா
எண்ணெய் விலை

வெகுவாக
சரிவுற்ற
நிலையிலும்

தொடரும்
எரிபொருள்
விலையேற்றம்...

இந்திய
பணத்தின்
வீழ்ச்சி

இப்படியாக
வெள்ளந்திச்
சனங்களின்

விழிநீர்
கசிவுகளே

இப்போது
வாக்குப்பதிவு
எந்திரங்கள்
மூலம்
தரப்பட்டிருக்கும்

பதிலாக
இருக்கிறது
என்பதை

உரியவர்கள்
ஏற்றுக்
கொண்டு

உடனடித்
தீர்வுக்கு
வழி கண்டால்

இன்றைய
கசந்த காலம்

நாளை வசந்த
காலமாகவும்
மாறலாம்தானே...

You'r reading வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள்... பாஜக மீது அதிமுக அட்டாக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றிய மு.க.ஸ்டாலின்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்