ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநில புதிய முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

MK Stalin wishes to Chief Ministers of Rajasthan and MP

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களின் முதல்வர்களாக அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் ஆகியோர் பதவியேற்றனர். இப்பதவி ஏற்பு விழாக்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கேற்றனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து மூன்று மாநிலங்களில் வெற்றிப் பெற்றது.
குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் ஆட்சியை நிலை நிறுத்தியது.

இதேபோல், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து, மத்திய பிரதேச முதல்வராக அம்மாநில மூத்த தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பகேல் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இவரை தொடர்ந்து துணை முதல்வராக சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைதொடர்ந்து, மதியம் 1.30 மணியளவில் மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜம்பூரி திடலில் முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றுக் கொண்டார். இவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், "மத்தியப் பிரதேசம் மாநில முதல்வர் கமல்நாத் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

You'r reading ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநில புதிய முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் வயசுக்கு வரலையா? – கனா ஸ்நீக் பீக் ரிலீஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்