ஜெ,.மரணத்தின் பின்னணியில் ஓபிஎஸ்- விஜயபாஸ்கர்! ராதாகிருஷ்ணனுக்காகக் களமிறங்கிய காம்ரேடுகள்!!

Doctors union supports to Radhakrishnan in Jaya death row

சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மருத்துவர்கள் சங்கம் பகிரங்கமாகக் களமிறங்கியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியது பன்னீர்செல்வமும் விஜயபாஸ்கரும்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சுகாதாரத்துறை செயலாளரின் தொடர்புகளை விசாரிக்க வேண்டும். இதய அறுவை சிகிச்சை செய்திருந்தால் அம்மாவைக் காப்பாற்றியிருக்க முடியும். அப்படிச் செய்யாமல் தடுத்தது யார்' எனக் கேள்வி எழுப்பிருந்தார் சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம்.

இந்தப் பேட்டி கோட்டை வட்டாரத்தில் சூட்டைக் கிளப்ப, எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார் ராதாகிருஷ்ணன். இதுதொடர்பாக செயலாளர் விளக்கம் கொடுப்பதற்கு முன்னதாக, இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.

அப்போது அவர் பேசியவதாது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான பிரச்சனையில் ,அரசு அதிகாரிகளை பலிக்கடா ஆக்க முயல்வது கண்டனத்திற்குரியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்து மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் சந்தேகங்கள் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தற்பொழுது ஒரு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையம் இது குறித்து விசாரித்துவரும் நிலையில், அமைச்சர்கள் விசாரணையை திசை திருப்பும் வகையில் செயல்படுவது வருத்தமளிக்கிறது. இரவு பகல் பாராமல் ஜெயலிலிதா அவர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு மன வேதனையையும், அச்சத்தையும் உருவாக்கும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.

சிகிச்சை வழங்குவதில் தொடர்புடையவர்களை காவல் துறை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்பது மருத்துவக் குழுவினரிடையே அச்சத்தையும்,
அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்று வந்த பொழுது அவர் இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார் என்றெல்லாம் கூறிய அமைச்சர்கள் , பின்னர் அது பொய் என்று கூறிய அமைச்சர்கள், இன்று சந்தேகக் கணைகளை தங்களுக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் மீது திருப்புவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட ,சிகிச்சை முறைகளில் குறைபாடுகள் இருப்பதாக கருதி இருந்தால்,முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் வகித்த ஓ.பி.எஸ், ஜெயலலிதாவை வேறு மருத்துவமனைக்கோ வெளிநாட்டு மருத்துவமனைக்கோ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்க முடியும். அதை ஏன் செய்யவில்லை?

தனது பொறுப்பை ஏன் நிறைவேற்றவில்லை? ஜெயலலிதா அவர்கள் இறப்பில் மர்மம் இருப்பதாக கருதியிருந்தால், ஏன் உடற் கூறாய்வு( போஸ்ட் மார்ட்டம்) செய்திட அன்றைய அமைச்சரவை முடிவு செய்யவில்லை?

இவை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. காவல்துறை உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சரவையை கூட்டும் அதிகாரமும் வழங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா அவர்களின் சிகிச்சை குறித்து அமைச்சரவை ஏன் கூடி முடிவு எடுக்கவில்லை? மருத்துவமனையின் அறிக்கையை ஏன் கோரி பெறவில்லை?

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பொது மக்களுக்கு அரசுத்தரப்பிலிருத்து ஏன் விளக்க அறிக்கை வழங்கவில்லை? மக்களுக்கு இருந்த சந்தேகத்தை ஏன் போக்கவில்லை?

இப்பொழுது திடீரென்று சட்ட அமைச்சர் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டைவைத்து,விசரணை கமிசனின் விசாரணையை திசை திருப்புவதேன்? அரசியல் நோக்கங்களுக்காக,தங்களுக்கு கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகளை பலிக்கடா ஆக்குவதேன்?

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து ,அமைச்சரவை கூடி முடிவு செய்யாத நிலையில்,தற்பொழுது சில அதிகாரிகளையும் மருத்துவக் குழுவையும் குறை சொல்வதேன்? ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை ஒருங்கிணைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரே ஒரு மருத்துவர். அவர் மேற்பார்வையில் தான் சிகிச்சைகள் நடந்தன.

அவரும் தவறு செய்துவிட்டார் என அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்கிறாரா? இந்திய மற்றும் தமிழக மருத்துவர்களின் திறமையை இழிவு படுத்தும் வகையில் சட்ட அமைச்சர்கள் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

இத்தகைய போக்கு, நமது மருத்துவர்கள், மருத்துவமனைகளின் மீது உள்ள நம்பிக்கையை சீர் குலைத்துவிடும். எதிர்காலத்தில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொழுது அச்ச மன நிலையுடன் செயல்படும் நிலை உருவாகும்'. இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading ஜெ,.மரணத்தின் பின்னணியில் ஓபிஎஸ்- விஜயபாஸ்கர்! ராதாகிருஷ்ணனுக்காகக் களமிறங்கிய காம்ரேடுகள்!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எவ்வித எதிர்ப்புமின்றி ஐயப்ப தரிசனம் திவ்யமாக இருந்தது - கேரள பெண் பிந்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்