வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நடந்த திமுக கூட்டத்தில் தனது ஊருக்கு வரமுடியுமா ? என்று எதிர்க் கட்சியினருக்குச் சவால் விட்டுப் பேசிய திமுக பிரமுகரின் வீட்டுக்குச் சென்ற புகுந்த மர்ம நபர்கள், அவரது கார் மற்றும் பைக்கை அடித்து நொறுக்கியும் முட்டைகளை வீசியும் துவம்சம் செய்துள்ளனர்.நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வண்டு முருகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.அதில் மேடையில் அட்டகாசமாகச் சவால் விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் காமெடியைப் போல நிஜமாகவே ஒரு அரசியல் பிரமுகர் சவால் விட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது .

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர். இவர் திமுகவில் மாநில மாணவரணி துணை செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு ஆறுமுக நேரியில் நடந்த திமுகவின் கிராம சபைக் கூட்டத்தில் இவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உமரிசங்கர், மாற்றுக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்ததுடன். யாருக்காவது தைரியமிருந்தால் தனது ஊருக்கு வந்து பார்க்குமாறு சவால் விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல் உமரிசங்கரின் வீட்டிற்கு வந்தது. அரிவாள் மற்றும் ஆயுதங்களால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை அடித்து நொறுக்கியது அந்த கும்பல். மேலும் அருகில் நின்றிருந்த பைக்கையும் சேதப்படுத்தியுள்ளனர். அவர் கார் முழுவதும் முட்டையை வீசி நாசம் செய்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர் அந்த மர்ம நபர்கள்.தகவல் அறிந்து வீட்டிற்குச் சென்ற உமரிசங்கர் தனது கார் அடித்து நொறுக்கப்பட்டது குறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பங்களா போன்று வீடு கட்டியுள்ள உமரிசங்கர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.இதனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்று எளிதில் கண்டறிய முடியவில்லை.ஏற்கனவே தூத்துக்குடி திமுகவில் உள்ள கோஷ்டி பூசலில் உமரி சங்கர் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பதால், உட்கட்சி விவகாரமா ? அல்லது கிராம சபைக் கூட்டத்தில் விட்ட சவாலுக்கு கிடைத்த பரிசா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

You'r reading வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக கோஹ்லி தேர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்