அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனிலும் மறுக்கப்படுகிறதா விசா?

வேலைக்கான உத்தரவு இருந்தும் இந்திய எஞ்ஜினியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 6,080 உள்ளிட்ட திறன்மிகு பணியாளர்களுக்கு பிரிட்டன் (யூகே) விசா மறுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரையுள்ள காலகட்டத்திற்கான இந்த எண்ணிக்கையை அறிவியல் மற்றும் பொறியியலுக்கான முகமை பிரிட்டன் உள்துறையிடமிருந்து பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பணிக்கு வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பிரிட்டனில் டயர் 2 விசா வழங்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து அதிகபட்சமாக மாதத்திற்கு 1,600, ஆண்டுக்கு 20,700 பேருக்கு டயர் 2 விசா கொடுக்கப்பட்டு வருகிறது. 2017 டிசம்பர் வரையிலான கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை இந்த உச்சபட்ச வரம்பு மீறப்பட்டுள்ளது.
அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உச்சபட்ட வரம்பை விட விசா எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பிரிட்டனின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் கொடுத்துள்ள தகவல்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் திறன்மிகு பணியாளருக்கான விசா பெற்றுள்ளவர்களுள் 57 விழுக்காடு இந்தியர் என்று தெரியவந்துள்ளது.
பிரிட்டன், இந்தியா இடையே அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் திறமை பரிமாற்றம் இருந்து வருகிறது. இந்த உறவுக்கு ஊறு விளைப்பதாக குடிபுகல் துறையின் நடைமுறை இருப்பதை வெளிப்படுத்தவே இந்த புள்ளிவிவரத்தினை கேட்டுப்பெற்றுள்ளோம் என்று அறிவியல் மற்றும் பொறியியல் முகமையின் துணை இயக்குநர் நவோமி வெய்ர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மட்டும் தேசிய சுகாதார சேவையினால் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இந்திய மருத்துவர்களுக்கு, உச்சவரம்பை காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியிடங்கள் அதிகமாக நிரப்பப்பட வேண்டிய நிலையில் பிரிட்டன் குடிபுகல் துறை நடைமுறையை தளர்த்த வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ கூட்டமைப்பு கவுன்சில் தலைவர் Dr. சந்த் நாக்பால் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனிலும் மறுக்கப்படுகிறதா விசா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடேடே.. சூப்பரான தயிர் சிக்கன் கிரேவி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்