பூமியிலிருந்து நிலவுக்குச் சென்ற பாறை

Earths oldest rock found on Moon

நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட பாறை படிமங்களுள் ஒன்று, பூமியிலிருந்து சென்றதாக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் நிலவு அறிவியல் மற்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (NASA) அப்போல்லா 14 விண்கலத்தை 1971ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பி வைத்தது. அவ்விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் 42.9 கிலோ பாறைகளை ஆய்வுக்காக எடுத்து வந்தனர். அவற்றை ஆய்வு செய்து வந்த விஞ்ஞானிகள் 2 கிராம் எடையுள்ள பாறை துணுக்கில் குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பர் மற்றும் ஸிர்கான் போன்ற தாதுக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இவ்வகை தாதுக்கள் நிலவில் தென்படாதவை. ஆனால், பூமியில் இருக்கக்கூடியவை.
இந்தப் பாறையானது 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த எரிகல் அல்லது வால்நட்சத்திர மோதல் மூலம் பூமியிலிருந்து சந்திரனுக்குச் சென்றிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தப் பாறைத் துணுக்கின் மீதான வேதியியல் ஆய்வு இது பூமியில் நிலவும் வெப்பநிலையில் படிகமாகியது என்ற முடிவை தந்துள்ளது. இப்பாறை துணுக்கு எந்த வெப்பநிலையில் படிகமாகியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனவோ அந்த வெப்பநிலை சந்திரனில் நிலவுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல் நிகழ்ந்ததாக கருதப்படும் காலகட்டத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இப்போது இருப்பதை காட்டிலும் மூன்று மடங்கு தொலைவு குறைவாகவே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பூமியின் தரைமட்டத்திலிருந்து 12 மைல் ஆழத்திற்குள் புதைந்திருந்த இப்பாறைத் துணுக்கு, விண்வெளி மோதல் மூலம் சந்திரனுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வு நோக்கர்கள் கருதுகின்றனர்.
"ஏறக்குறைய 48 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துவரப்பட்ட இப்பாறைத் துணுக்கின் மூலம் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு முன்பிருந்த நிலை குறித்து சற்று தெளிவான பிம்பத்தையும், பண்டைகாலங்களில் பூமி சந்தித்த விண்மோதல்கள், அவற்றால் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று நிலவு அறிவியல் மற்றும் ஆய்வு மைய முதன்மை ஆராய்ச்சியாளர் டேவிட் க்ரிங் கூறியுள்ளார்.

You'r reading பூமியிலிருந்து நிலவுக்குச் சென்ற பாறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'முடிந்தது அவகாசம்'- பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்