கொரோனா அச்சம் எதிரொலி.. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி.. கனடா, ஆஸி. புறக்கணிப்பு..

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 175 நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி, நேற்று(மார்ச் 21) வரை 3 லட்சத்து 8,215 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 13,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 32-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் உலகம் முழுவதும் தீவிரமடைந்திருக்கிறது. இதனால், ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா அல்லது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கனடா ஒலிம்பிக் கமிட்டி இன்று வெளியிட்ட அறிவிப்பில், கனடாவிலிருந்து தடகள வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப் போவதில்லை. ஒலிம்பிக் போட்டியை விட வீரர்களின் உடல்நலனே மிகவும் முக்கியம். எனவே, ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி வைப்பது அவசியமாகிறது என்று தெரிவித்திருக்கிறது.

இதே போல், ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.
இதற்கிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கூறுகையில், தற்போதைய சூழலில் ஒலிம்பிக் போட்டியைத் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்றார்.

You'r reading கொரோனா அச்சம் எதிரொலி.. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி.. கனடா, ஆஸி. புறக்கணிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிளஸ் 2 பொதுத் தேர்வைத் தாமதமாகத் தொடங்க ஐகோர்ட் உத்தரவு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்