மாலியில் ராணுவப் புரட்சி.. அதிபர், பிரதமர் சிறைபிடிப்பு.. ஐ.நா. கண்டனம்..

Mali mutiny leaders arrest President, Prime Minister.

ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் நேற்று(ஆக.18) ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்தா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை சிறைபிடித்தனர். இதையடுத்து, தாம் ராஜினாமா செய்வதாக கெய்தா அறிவித்துள்ளார்.
மாலியில் அதிபர் கெய்தாவுக்கு எதிராக மக்கள் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர். அதிபர் மற்றும் பிரதமர் சிஸ்சே மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் ராணுவ உயர் அதிகாரிகள் 4 பேர் சேர்ந்து ராணுவ வீரர்களைத் தூண்டி விட்டு, திடீர் புரட்சியில் இறங்கினர்.

ராணுவ கிளர்ச்சியாளர்கள் அதிகாலை வேளையில் அதிபரையும், பிரதமரையும் சிறை பிடித்தனர். அவர்கள் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல், ஆட்சியில் உயர்பதவியில் இருந்தவர்கள் சிலரையும் கிளர்ச்சியாளர்கள் சிறை வைத்துள்ளனர். நாட்டில் தீவிரவாத செயல்களைத் தடுக்க தவறியதாகவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அதிபர் மீது ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், சிறைக்காவலில் உள்ள அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். மிகவும் அமைதியாகக் காட்சியளித்த அவர், ராணுவத்தில் உள்ள சில சக்திகள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளன. இதை முடிவுக்குக் கொண்டு வர நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதனடிப்படையில், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்த காரணத்திற்காகவும் மக்கள் ரத்தம் சிந்துவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

மாலியில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிக்கு அந்நாட்டின் அண்டை நாடுகளான பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கவலை தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேட்டியளித்தார்.அவர் கூறுகையில், “மாலியில் தற்போது நிலவும் பிரச்சனைகளை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதிபர் மற்றும் பிரதமரைக் கிளர்ச்சியாளர்கள் எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு ஜனநாயக ஆட்சி திரும்ப வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading மாலியில் ராணுவப் புரட்சி.. அதிபர், பிரதமர் சிறைபிடிப்பு.. ஐ.நா. கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6 ஆயிரம் தாண்டியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்