அடங்கினார் டிரம்ப்.. ஜோ பிடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல்..

அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கித் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வந்தது. கொரோனா அச்சம் காரணமாகப் பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது.

அதே சமயம், மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளைப் பெற வேண்டும். ஆனால், நான்கைந்து நாளில் ஜோ பைடன் 290 எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று விட்டார். அதனால் அவர் தனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கிடையே, டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து விட்டார். தானே வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார். மேலும், அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்தியா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி என்று உலக நாடுகளின் பிரதமர்கள், ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய அதிபரை அங்கீகரித்தனர். இதனால், அமெரிக்காவில் குழப்பம் காணப்பட்டது. இரு கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, டிரம்ப் கட்சியினரின் வழக்குகளில் அவருக்குச் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. அதே போல், பென்சில்வேனியா, ஜார்ஜியா என அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஜோ பிடன் முன்னிலை பெற்றார். கடைசியாக மிச்சிகனிலும் ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்றதாக நேற்று(நவ.23) அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஜோ பிடன் அணியினரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பொது நிர்வாக அதிகாரி எமிலி மர்பியின் பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து, துன்புறுத்தினார்கள். அது தொடரக் கூடாது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

நாட்டின் நலனுக்காக நிர்வாகத்தை மாற்றிக் கொடுப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்யுமாறு எமிலி மர்பி டீமுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார். டிரம்ப் நியமித்த எமிலி மர்பி, தேர்தலுக்கு முடிவுக்கு பின்பும் அவரது விசுவாசியாகச் செயல்பட்டதாகப் பலரும் விமர்சித்தார்கள். அதற்குப் பதிலளித்து ஜோ பிடனுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், நான் எனது பொறுப்புகளை உணர்ந்து தேர்தல் முடிவுகளைச் சரியாகக் கவனித்து உரிய வகையில்தான் செயல்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது புதிய அதிபர் ஜோ பைடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

You'r reading அடங்கினார் டிரம்ப்.. ஜோ பிடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தலித் ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்டது பிராமணர் சமைத்த உணவு.. மம்தா பானர்ஜி தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்