அமைதியான போராட்டத்துக்கு எப்போதும் துணை நிற்போம்!- கனடா பிரதமர் உறுதி

10வது நாளை எட்டியிருக்கிறது விவசாயிகளின் போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்து டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டுள்ளனர் விவசாயிகள். இவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. சர்வதேச அளவிலும் போராட்டம் கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், ``இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. இந்த செய்தி கவலை கொள்ள செய்கிறது. எங்களின் கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க எப்போதும் கனடா துணை நிற்கும்" என்று போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்து பேசிஇருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு, ``ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை" எனக் கூறியது. இத்துடன் நில்லாமல், ட்ரூடோவின் கருத்தைக் கண்டிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை சார்பில், கனடா நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கனட தூதர் நதிர் படேலை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்தால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ட்ரூடோ தற்போது இந்த விவகாரத்தில் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ``அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும், மனித உரிமைகளுக்காக கனடா எப்போதும் துணை நிற்கும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்" என்று மீண்டும் தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார் ட்ரூடோ. ட்ரூடோ மட்டுமல்ல, இங்கிலாந்தைச் சேர்ந்த 36 எமபி க்களும், ஐநா அமைப்பும் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரித்துள்ளது மத்திய அரசுக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

You'r reading அமைதியான போராட்டத்துக்கு எப்போதும் துணை நிற்போம்!- கனடா பிரதமர் உறுதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்