டிரம்ப் கெடுத்து வைத்துள்ள நீதித்துறையை சீர்படுத்துவேன்.. புதிய அதிபர் ஜோ பிடன் பேச்சு..

டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜோ பிடன் 310 எலக்டோரல் வாக்குகளைப் பெற்று வென்றார். இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக கடந்த ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜன,20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.

முன்னதாக, டிரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய அதிபர் ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடந்தது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ அல்ல. அது திட்டமிட்ட கலவரம். அவர்கள்(டிரம்ப் ஆதரவாளர்கள்) போராட்டக்காரர்கள் அல்ல. கலவரக்காரர்கள். உள்நாட்டுத் தீவிரவாதிகள்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்த பின்பு, எனது பேத்தி ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தாள். லிங்கன் நினைவிடம் அருகே கருப்பர்கள் போராடிய போது ராணுவத்தினர் எப்படி அவர்களைத் தாக்கினார்கள் என்பதைக் காட்டும் படம் அது.கேபிடல் கட்டிடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஒருவேளை கருப்பர்களாக இருந்திருந்தால், அமெரிக்க நீதி நிர்வாகத் துறையினரும், காவல் துறையினரும் வேறு விதமாகச் செயல்பட்டிருப்பார்கள். எல்லோருக்கும் இந்த உண்மை புலப்படும். நான் பதவியேற்றதும் அமெரிக்க நீதித்துறையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் மதிப்பு மரியாதையை மீட்டெடுப்பேன். டிரம்ப் நிர்வாகத்தால் கெடுத்து வைக்கப்பட்டுள்ள நீதித்துறையின் மாண்பை மீட்பேன்.
இவ்வாறு ஜோ பிடன் பேசியுள்ளார்.

You'r reading டிரம்ப் கெடுத்து வைத்துள்ள நீதித்துறையை சீர்படுத்துவேன்.. புதிய அதிபர் ஜோ பிடன் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்னும் 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப்.. வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்