திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான வைகுண்ட ஏகாதசி விஐபி தரிசன கோட்டா வெளியிடப் பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாழடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யவும், தூப தீப நைவேத்யங்கள் சமர்ப்பிக்கவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்குத் திருப்பதி கோவிலில் 500 ரூபாய் கட்டண வரிசையில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
25ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த பத்து நாட்களுக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கும் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்து வைக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கு 10 நாட்களுக்கு மொத்தம் 18 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்குவதோடு வைகுண்ட ஏகாதசிக்கான விஐபி தரிசன டிக்கெட்டுகளை கூடுதலாக 1000 ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.